குப்பையில் கிடந்த பூச்சு மருந்தை குளிர்பானம் என குடித்த 4 வயது சிறுவன் பலி




குப்பையில் கிடந்த பூச்சு மருந்தை குளிர்பானம் என குடித்த 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம்அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பாபு. கூலி தொழிலாளி. இவரது மகன் அகிலன் என்கிற கதிர்வேலன் (வயது 4). இன்று காலை வீட்டின் அருகே அந்த பகுதி சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு அந்த பகுதிகளில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு இடத்தில் சேர்த்து வைத்திருந்தனர்.அப்போது குளிர்பானம் பாட்டில் போன்று ஒன்று கிடந்துள்ளது. இதைபார்த்த அகிலன் அது குளிர்பானம் என்று நினைத்து அதை எடுத்து அருந்தியுள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவன் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளான்.
இதை பார்த்த அவரது பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு சிறுவனை தூக்கிக்கொண்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் சிறுவன் விஷம் அருந்தியுள்ளான் என்று கூறினார்.
உடனடியாக சிறுவன் விளையாடி இடத்திற்கு வந்து பார்த்த போது குப்பையில் வயலுக்கு தெளித்து விட்டு மீதியான பூச்சு மருந்து டப்பாவை யாரோ சாலையில் வீசியுள்ளனர்.அந்த டப்பாவை எடுத்து சிறுவன் குளிர்பானம் என்று குடித்துள்ளான் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிர்பானம் என்று பூச்சமருந்தை குடித்த சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments